திருச்சி அன்னை ஆசிரமத்தில் 83 சிறுமிகள் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், அவர்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகள் நலக் குழு மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தினர். இதனால், அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டு, இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
திருச்சி வயர்லெஸ் சாலையில் இருக்கும் அன்னை ஆசிரமம் என்ற இல்லம், அரசாங்க மானியம் பெற்று தமிழ்நாடு பெண்கள் நலc சங்கத்தால் நடத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் நலக் குழுவால் சிறார் நீதிச் சட்டத்தின்கீழ் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான சிறுமிகள் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். சிறுமிகளுக்குச் சரியான நேரத்தில் உணவு வழங்கப்படாமல், சரியான பாதுகாப்பு கொடுக்காமல் இருந்ததாகவும் சில ஊழியர்களால் மனரீதியான, உடல்ரீதியான அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக சமீபத்திய மாதங்களில் புகார்கள் எழுந்தன.
உடல்ரீதியான துன்புறுத்தலில் பராமரிப்பாளரால் அடிக்கப்பட்டும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டும் உள்ளது. புதன்கிழமை, ஒரு ரகசிய தகவலின்பேரில், அதிகாரிகள் வழக்கமான ஆய்வு என்ற போர்வையில் வீட்டிற்குச் சென்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை, நோய்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன, சரியான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து அவர்கள் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் கலெக்டர் வி.சரவணன் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்நது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சந்தியா மற்றும் ஒரு குழுவினர் சிறுமிகளுடன் கலந்துரையாடினர்.
விசாரணையின்போது பல குழந்தைகள் குற்றச்சாட்டுகளை மீண்டும் உறுதி செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமிகள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க போதுமான காரணங்கள் இருந்தது என்று சந்தியா கூறினார்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, சனிக்கிழமை 83 சிறுமிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களின் பாதுகாப்பு மற்றும் பல மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதைக் கருத்தில் கொண்டு அவர்களில் 36 பேர் கே.கே.நகரில் உள்ள நாகம்மை இல்லத்திற்கும், 47 பேர் மாத்தூரில் உள்ள அரசு நடத்தும் அன்னை சத்யா இல்லத்திற்கும் மாற்றப்பட்டனர்,
உணவு மற்றும் தங்குமிடம் வழங்கவும், குழந்தைகளின் கல்வி தடையின்றி தொடர்வதை உறுதி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்க மானியமாக ஒரு குழந்தைக்கு மாதத்திற்கு சுமார் ₹3,000 பெறும் இந்த இல்லம், மேலும் விசாரணைக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவுகளுடன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் மற்றும் ஊழியர்கள குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.