திமுக-வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி, இல்லத்தரசி திட்டத்துக்கான 8,000 ரூபாய் கூப்பன்களை வினியோகித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக், தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ் 8,000 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும் எனவும், அதில் விருப்பப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை மகளிர் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 8,000 ரூபாய்க்கான கூப்பன்களை திமுக வேட்பாளர்கள் சிலரும், கட்சியினரும் வாக்காளர்களுக்கு வினியோகித்து வருவதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவை தெற்கு , பர்கூர், பாலக்கோடு, கும்பகோணம் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பல தொகுதிகளில், முதல்வர் புகைப்படம், வரிசை எண்ணுடன் இந்த கூப்பன்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. போட்டியிடும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த கூப்பன்களை வழங்க முடியும் எனவும், ஆட்சிக்கு வரும் முன்பே கூப்பன்கள் வினியோகிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், சில தொகுதிகளில் திமுக-வினரும் இந்த கூப்பன்களை வினியோகித்து வருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூப்பன்களை பறிமுதல் செய்து, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கூப்பன் வினியோகம் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.