தமிழ்நாடு

மனு கொடுக்க வந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர்!

மனு கொடுக்க வந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர்!

webteam

மதுரையில் மனு கொடுக்க வந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவைச் சேர்ந்த பாத்திமா சுல்தான் என்ற 80 வயது மூதாட்டி உடல்நிலை குன்றிய நிலையில் கையில் மனுவுடன் மாவட்ட ஆட்சியரை பார்க்க காத்திருந்தார். அப்போது அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மூதாட்டியை பார்த்ததும் திடீரென காரில் இருந்து இறங்கி மூதாட்டியிடம் நலம் விசாரித்தார். மூதாட்டுக்கு தேநீர் வாங்கிக்கொடுத்த மாவட்ட ஆட்சியர்,தொடர்ந்து மூதாட்டியிடம் மனு குறித்து கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் தன்னுடைய குறையை சொன்ன மூதாட்டி, தான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டை காலிசெய்ய வைத்துவிட்டு பணத்தை தராமல் ஏமாற்றுவதாக கூறினார்.

இதையடுத்து மூதாட்டியை தனது காரில் ஏற்றிய மாவட்ட ஆட்சியர், மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். மூதாட்டியின் கையால் தண்ணீர் குடித்தபின்பு மூதாட்டிக்கு தனது சொந்த பணத்தை செலவுத்தொகையாக வழங்கினார். இதையடுத்து மூதாட்டியின் புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.

உடல்நலம் குன்றிய மூதாட்டியின் நிலை அறிந்து தேடிவந்து மனுவை பெற்று வீட்டிற்கே தனது காரில் அழைத்துசென்ற மாவட்ட ஆட்சியரின் செயல் பல்வேறு தரப்பினரையும் நெகிழ்ச்சி அடையவைத்தது

மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் கரூரில் பணிபுரிந்தபோது தனது ஓட்டுநர் பணிஓய்வின் போது அவரை தனது வாகனத்தில் அமரவைத்து அன்பழகனே வாகனத்தை ஓட்டிசென்று ஓட்டுநரின் வீட்டில் இறக்கிவிட்டு பாராட்டுகளை பெற்றவர் குறிப்பிடத்தக்கது.