வேலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அகரம் புதுமனை கிராமத்தில் வசிக்கும் தம்பதி அருள்-அனிதா. இவர்களின் இரண்டாவது மகன் அரிஷ் (8). இவரைக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மராட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த பிறகு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு அறிகுறி இருப்பதாகக்கூறி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் சிறுவனின் சொந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.