திருவள்ளூர் மற்றும் சென்னையில் மொத்தமாக 8 பெண்கள் மாயமாகியுள்ளனர். ஒரே நாளில் 8 பெண்கள் மாயமாகியுள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாயமான பெண்கள் விவரம்
திருவள்ளூர் மாவட்டம் கரிக்கலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (18) என்ற பெண், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவேடு எல்லைக்குட்பட்ட ஜமீன் கொரட்டூர் பகுதியில், சித்தி வீட்டில் இருந்த சிவரஞ்சனி (16) என்ற பெண் காணாமல் போயுள்ளார். இதுதொடர்பாக வெள்ளவேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புல்லரம்பாக்கம் பகுதியில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி சென்ற கலைவாணி (20) என்ற பெண்ணை காணவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வேலைக்கு சென்ற வர்ஷா (20) என்ற பெண் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக பெற்றோர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை ஏழுமலை நகரில் வசித்து வருபவர் கிருஷ்ண மூர்த்தியின் பேத்தி வினோதினி. கல்லூரி மாணவியான இவர் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக சிட்லபாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிட்லபாக்கம் பாலமுருகன் நகரில் வசித்து வரும் சரவணன் என்பவர் தனது மனைவியை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். பாலமுருகனின் மனைவி நீலா தேவி (25) நேற்றிரவு கடைக்கு செல்வதாகக் கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
தாம்பரத்தை அடுத்த சேலையூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சண்முகம் (76) ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது பேத்தி 11ம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் தனது தோழியுடன் விளையாட சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது தோழியிடம் விசாரிக்க சென்றுள்ளார். ஆனால் அங்கு அந்தப்பெண்ணும் இல்லை. இதனையடுத்து இருவரும் மாயமானது தெரியவந்துள்ளது.பள்ளி மாணவிகள் மாயமானது தொடர்பாக சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மற்றும் சென்னையில் மொத்தமாக 8 பெண்கள் மாயமான சம்பவம் போலீசாருக்கு சவாலாக விளங்குகிறது. இதனையடுத்து மாயமான பெண்களை யாரேனும் கடத்திச் சென்றனரா..? எப்படி மாயமாகினர்..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.