ஓகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் 8 கிராம மக்கள் பேரணியாக சென்று ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகி புயலால் நூற்றுக்கணக்கான கன்னியாகுமரி மீனவர்கள் கடலில் சிக்கி காணமல் போயுள்ளனர். அவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை, இரவிப்புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை உள்ளிட்ட 8 கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தின் போது, காணாமல் போன ஆயிரத்திற்கும் மேலான மீனவர்களை மீட்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியுள்ளனர். முன்னதாக 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியாக சென்று குழித்துறை ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்காக நீரோடி மற்றும் சின்னத்துறை கிராமங்களிலிருந்து 2 குழுக்களாக மீனவர்கள் குடும்பத்தினருடன் பேரணியாக குழித்துறை நோக்கி சென்றனர். ஏறக்குறைய 12 கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்ற இந்தப் பேரணிக்கு வழிநெடுக மீனவர்களின் ஆதரவு பெருக்கிக்கொண்டே சென்றது. காலை 9 மணியளவில் தொடங்கிய பேரணி 12 மணிக்கு குழித்துறை ரயில்நிலையத்தை சென்றடைந்தது. இந்த முற்றுகைப் போராட்டம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.