தமிழ்நாடு

சிறுமிகள் பலி: 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிறுமிகள் பலி: 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

webteam

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியான சம்பவத்தில் 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 5 சிறுவர்களில், பாவனா, யுவஸ்ரீ என்ற 2 சிறுமிகள் பலியாகினர். அந்தப் பகுதியில் இருந்த மின்சாரப் பெட்டி ஒன்று திறந்த நிலையில், அபாயகரமான நிலையில் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ள போலீஸார் மற்றும் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதையத்து மின்சார வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மின்சார வாரியம் அறிவித்தது. இந்நிலையில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மேலும் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் பலியான சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.