திருச்சி அருகே வேன் மரத்தில் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே பயணிகளை ஏற்றிச்சென்ற வேன் மரத்தில் மோதிய கோர விபத்தில், காதணி விழாவிற்குச் சென்று திரும்பிய 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்த மகாராஜபுரத்தில் சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டம், பண்ணைக்காரன்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பொக்லைன் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சுரேஷ் இல்லக் காதணி விழாவில் பங்கேற்பதற்காக, செங்கல் சூளையில் வேலைபார்த்துவந்த, மகாராஜபுரம், கீழ சாத்தனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களும், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களும் என 10 பேர், ஒரு மாருதி ஈகோ வேனில் பண்ணைக்காரன்பட்டிக்குச் சென்றனர். விழா முடிந்து அனைவரும் மீண்டும் தஞ்சாவூர் நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர்.
வாகனத்தை மகாராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (35) என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி மாவட்டம், முசிறி - துறையூர் நெடுஞ்சாலையில் ஜம்புநாதபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் வேன் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஓட்டுநர் ராஜேஷ் (35), மகாராஜபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம், முருகன், கீழ சாத்தனூரைச் சேர்ந்த சங்கிலி மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த பாவாடை ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், படுகாயமடைந்த மற்ற 5 பேரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மகாராஜபுரத்தைச் சேர்ந்த சக்திவேல், சுப்பிரமணி மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த சீதாராமன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
விபத்தில் படுகாயமடைந்த கீழ சாத்தனூரைச் சேர்ந்த ராமர் (40), ராமலிங்கம் (40) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல்சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய பிரமருக்கான அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.