19 கொரோனா உயிரிழப்புகள் நேற்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் 8 பேர் எவ்வித இணைநோய்களும் ( Co - morbidity) இல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் நோய்கள், புற்றுநோய், இதய நோய்கள் என பல்வேறு நோய்களுக்காக நீண்ட நாட்களாக மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கே கோவிட் தொற்று அதிக பாதிப்புகளை உருவாக்கும் எனக் கூறப்பட்டு வந்தது. கொரோனாவால் மரணம் ஏற்படும் என்ற புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைநோய்கள் அற்றவர்களின் உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அதன்படி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் எவ்வித இணைநோய்களும் இல்லாமல் கடந்த 4 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 30 வயதான இளைஞர் சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளார். இவருக்கு தொற்று இருப்பது ஜுன்5 ஆம் தேதி தான் உறுதிசெய்யப்பட்டது. மேலும் இங்கு அனுமதிக்கப்பட்ட 39 வயது இளைஞரும் ஜீன் 5 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். 43 வயதான ஆண் மே 31 ஆம் தேதி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முடிவுகள் கிடைக்க ஜீன் 4 தேதி ஆகியுள்ளது. ஜீன்5 ஆம் தேதி அவர் உயிரிழந்திருக்கிறார். 5 நாட்கள் தாமதமாக பரிசோதனை முடிவுகள் கிடைக்க என்ன காரணம் எனும் கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சளி, காய்ச்சல் வேறெந்த நோய்களும் இன்றி கடந்த மே 26 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 73 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி ஜுன் 5 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, தனியார் மருத்துவமனைகளில் இருமல், சளி, காய்ச்சல் ஆகிய பிரச்சனைகளுடன் மட்டுமே சுமார் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண், 63 வயது பெண் உயிரிழந்துள்ளனர். 58 வயது ஆண் 2 நாள் சிகிச்சை பெற்ற நிலையிலும், 71 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்ட அதே நாளிலும் உயிரிழந்திருக்கிறார்கள்.