செய்தியாளர் - அன்பரசன்
சென்னை அபிராமபுரத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணாபுரம், வல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்த தேவநாதன். இவருக்கு திருமணமாகி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு கடந்த சில நாட்களாகவே சளி பிரச்சனை இருந்துவந்த காரணத்தால் அவர்கள் வீட்டிலேயே கைவைத்தியம் பார்த்து சளியை சரி செய்துவிட எண்ணியுள்ளனர். ஆனால் சளி சரியாகாமலே இருந்துள்ளது. இதனால் கடந்த 13ஆம் தேதி மாலை விக்ஸ் மற்றும் கற்பூரத்தை குழைத்து குழந்தையின் மூக்கில் தேய்த்துள்ளனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட குழந்தையின் பெற்றோர் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்தோடு குழந்தையின் பெற்றோரிடம் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சளி பிரச்சனை காரணமாக குழந்தை உயிரிழந்ததா? அல்லது சளி பிரச்சனைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை குழைத்து மூக்கில் தடவியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிர் இழந்ததா? என்பது குறித்து உடற்கூராய்வில் தான் தெரியவரும் என அபிராமபுரம் போலீசார் தகவல்.
தொடர்ச்சியாக இச்சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.