தமிழ்நாடு

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து - சக்கரத்தில் நசுங்கி தாய் கண்முன்னே 8 மாதக்குழந்தை பலி

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து - சக்கரத்தில் நசுங்கி தாய் கண்முன்னே 8 மாதக்குழந்தை பலி

Sinekadhara

மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து மோதியதில் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மயிலாடுதுறை அருகே மூவலூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு சஹானா(3), பவுன்சிகா என்ற 8 மாத குழந்தை என இரண்டு பெண்கள் உள்ளனர். புவனேஸ்வரி தனது கணவர் நடராஜனுடன் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே மேலையூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ன்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மல்லியம் மெயின் ரோட்டில் செல்லும்போது பின்பக்கமாக வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தை முந்தி சென்றுள்ளது. அதில் பேருந்து உரசியதில் நிலை தடுமாறி அனைவரும் கீழே விழுந்துள்ளனர்.

இதில் நடராஜனுக்கு தலையில் லேசான காயமும், புவனேஸ்வரிக்கு காலிலும் அடிபட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக சஹானா என்ற பெண் குழந்தை உயிர் தப்பியது. ஆனால் 8 மாத கைக்குழந்தையான பவுன்சிகா மீது அரசு பேருந்து சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்தை காவல் நிலையம் கொண்டுசென்று, காயம் அடைந்தவர்களையும் மீட்டு 108 வாகனம் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த குழந்தை பவுன்சிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.