நீட் தேர்வு எழுதாமல் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்து பல் மருத்துவக் கவுன்சில் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2016 -17-ஆம் கல்வி ஆண்டில், சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பில் 8 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதாததால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டனர். அதனால் அந்த 8 மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க இந்திய பல் மருத்துவக் கவுன்சில் மறுத்து விட்டது.
எனவே, பல் மருத்துவக் கவுன்சிலின் உத்தரவை எதிர்த்து 8 மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நீட் தேர்வு எழுதாததால், அந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டதாக இந்திய பல் கவுன்சில் அளித்த விளக்கத்தை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்து விட்டதால், அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.