விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை pt web
தமிழ்நாடு

“அவர்களே போனபின் நிதியை வைத்து என்ன செய்வது” - சாத்தூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள், மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

PT WEB

விருதுநகர் மாவட்டம் சிவகாசி - சாத்தூர் இடையே உள்ள சின்னகாமன்பட்டியில் கமல்குமார் என்பவர் நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ( பெசோ) உரிமம் பெற்று கோகுலேஸ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

இந்த பட்டாசு ஆலையில் 50- க்கும் மேற்பட்ட அறைகளில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை செய்யும் அறையில் காலை 8.30 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகே இருந்த 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. தகவல் அறிந்து வந்த சிவகாசி மற்றும் சாத்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி வெடித்து சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

அதில் மீனாம்பட்டியை சேர்ந்த மகாலிங்கம், வைரமணி, செல்லப்பாண்டி, ராமமூர்த்தி, ராமஜெயம், வைரமணி, லெட்சுமி, புண்ணியமூர்த்தி, செல்லப்பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த ஓ.கோவில்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி(45), செவல்பட்டியை சேர்ந்த லிங்குசாமி(45) உட்பட 5 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்து எதிரொலியாக பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. போர்மேன் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலையின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்து நடந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை உள்குத்தகைக்கு விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது குறித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் பட்டாசாலையில் விதிமீறல் நடந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்தார்.

“விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 4 மணி வரை பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை; மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து உரிய நிவாரணத் தொகை அளிக்கவில்லை; நீதிமன்ற உத்திரப்படி ஆலை நிர்வாகம் 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கத்தினர் பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீரோடு கவலையோடும் பிணவறை முன்பு காத்திருந்தனர்.

தங்கள் மகன்களையும் கணவர்களையும் இழந்த பெண்கள், “அவர்களே போன பின்பு அரசு கொடுக்கும் நிதியை வைத்து என்ன செய்யப் போகிறோம்; இனி அரசிடம் உதவி கேட்டு என்ன நடக்கப்போகிறது” என கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர். “ஆலை உள்குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; உயர்நீதிமன்ற உத்திரப்படி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்க வேண்டும்” என சிஐடியு சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.