தேனி மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள காட்டுத்தீயில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள அம்பரப்பர் மலை அருகே உள்ள அரலியூத்து வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சம் குறித்து கேரளாவில் 144 தடை உத்தரவு நீடித்து வரும் நிலையில் தமிழகத்திற்குள் வரக் கேரள வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதியான அரலியூத்து மலைப்பாதை வழியாக வர முயன்ற 8 பேர் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
காட்டுத்தீயை அணைக்கவும் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். காட்டுத்தீயில் சிக்கியுள்ள 8 பேரில் மூவர் குழந்தைகள் என்பதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரி ஒருவர் "காட்டு தீயில் சிக்கியிருப்பவர்கள் கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் எனத் தெரிகிறது. கேரளாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் பேருந்து கிடைக்காததால் சொந்த ஊரான போடிநாயக்கனூர் வருவதற்குக் காட்டு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் ராசிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் " காட்டுத்தீ ஏற்பட்ட தகவல் பிற்பகல் 2.30 மணிக்கு கிடைத்தது. எங்களுடைய முதல் குழு உடனடியாக கிளம்பினார்கள், ஆனால் இன்னமும் சென்றடையவில்லை. விரைவில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்போம் என நம்புகிறோம். இதற்காக போலீஸ், தீயணைப்பு மற்றும் கமாண்டோ படை வீரர்களும் சென்றுள்ளனர் என்றார்.
இதே தேனி மாவட்டம் குரங்கனி வனப்பகுதியில் 2018 ஆம் ஆண்டு ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுதீயில் சிக்கி 23 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.