ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனத்தோடு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் ஓஎன்ஜிசி புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க கூடாது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் காவிரி படுகை கூட்டமைப்பு சார்பில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் இறுதியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். புதுக்கோட்டையில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தை சேர்ந்தவர்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பத்து அம்ச கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். இதேபோல கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தலைமை தபால் நிலையத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் தடையை மீறி பேரணியாக சென்றனர். அனுமதியின்றி நடத்தப்பட்ட பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தஞ்சாவூரில், புதிய பேருந்து நிலையம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற பேரணியில், 28 சங்கங்களின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த கோரிக்கையுடன் தஞ்சை அரசு சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 2000க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி, காவிரி விவசாயிகள் சங்கம் தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவரும், முதன்மை செயலாளருமான சம்பு கல்லோலிக்கரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.