புதுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் ஊர்வலம் சென்றதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் இந்த ஊர்வலம் சென்றது. அப்போது குறிப்பிட்ட வழியில் ஊர்வலம் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த ஹெச்.ராஜா காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தடையையும் மீறி ஊர்வலம் சென்றது.
இந்நிலையில் திருமயம் காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல், சட்டத்தை மதிக்காமல் செயல்படுதல், இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், பொதுஅமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஒரு குழுவை குற்றத்துக்கு தூண்டும் வகையில் செயல்படுதல், குற்றத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழும் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.