ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 58 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ததில் 3 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 வேட்பாளர்கள் இருந்தனர்.
இந்நிலையில் வேட்புமனு திரும்ப பெறும் காலம் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளர் என மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 47 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் தலைமையில் சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஏற்கனவே உதயசூரியன் சின்னம் இருப்பதால் அதையே ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கரும்பு விவசாயி சின்னமும் மைக் சின்னமும் முறையே ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்தனர். இதில் கரும்பு விவசாயி சின்னம் வேறொரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் மைக் சின்னம் ஒதுக்குவதாக தெரிவித்தார். ஆனாலும், கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என மனிஷிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தை காண்பித்ததும் மைக் சின்னத்தை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.