திருவண்ணாமலை வைகாசி பௌர்ணமி கிரிவலத்தின் போது தர்மபுரி பெண் மற்றும் உள்ளூர் இளம் பெண் இருவரும் தனித்தனியாக கடத்தப்பட்டு காட்டில் அழைத்து செல்லப்பட்டு நிர்வாணப்படுத்தி பாலியல் துன்புறுத்தல், தங்க நகை பறிப்பு, ஜிபே மூலம் பணம் கோரி மிரட்டல் போன்ற கொடூரங்களுக்கு உள்ளானது. புகாரின் பேரில் டிஎஸ்பி தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி எட்டு பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் கடந்த 30ஆம் தேதி பிற்பகல் வைகாசி மாத பௌர்ணமி தொடங்கிய நிலையில் 31ஆம் தேதி பிற்பகல் பௌர்ணமி கிரிவலம் நிறைவடைந்தது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆன பெண் தனது நண்பர்களுடன் கடந்த 30ஆம் தேதி இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு இருசக்கர வாகனத்தில் செங்கம் சாலை வழியாக தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்த வேளையில், பெரியகோளாப்பாடி பாறை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
பின்னர் அவரது கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தங்களது செல்போனில் நிர்வாணமாக படம் எடுத்துவிட்டு மிரட்டி அனுப்பி உள்ளனர்.
31ஆம் தேதி தங்களது சொந்த ஊருக்கு சென்றவுடன் மர்ம நபர்கள் அவர்களை போனில் தொடர்பு கொண்டு இரண்டு சவரன் தங்கச் சங்கிலி தங்களுக்கு பத்தாது என்றும் ஒரு லட்சம் பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உங்களது நிர்வாண படங்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதின் பெயரில் முதற்கட்டமாக 4000 ரூபாய் ஜிபே மூலம் அனுப்பியுள்ளனர்.
ஆனால் அவர்கள் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் மீதி தொகை அனுப்ப முடியாததால் செய்வதறியாமல் தர்மபுரியில் இருந்து எண் 100 தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் தர்மபுரியில் உள்ள பெண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக திருவண்ணாமலைக்கு வரவழைத்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதேபோல் 31ஆம் தேதி இரவு திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேல் நகர் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் கூலி தொழிலாளியின் மகள் பியூட்டி பார்லரில் தனது பணியை முடித்துக் கொண்டு கிரிவலம் மேற்கொண்டுள்ளார்.
கிரிவலப் பாதை அடி அண்ணாமலை கிராமம் அருகே வந்த பொழுது நடக்க முடியாத காரணத்தினால் தனது நண்பருக்கு போன் செய்து தன்னை அழைத்துக் கொண்டு சென்று வீட்டில் விடும்படி கேட்டுள்ளார்.
அதன் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த செஞ்சி செம்மேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிரிவலப் பாதைக்கு வந்து இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஓட்டலில் டிபன் வாங்கிக்கொண்டு அப்யம்பாளையம் புறவழிச்சாலையில் சென்று உணவு அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இளைஞர்கள் அவர்கள் இருவரையும் அங்கிருந்த ஒரு காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று இருவரையும் நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும், மேலும் இளம்பெண் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்கம் காதணியையும் பிடுங்கிக் கொண்டு நாளை G-PAY மூலம் பணம் அனுப்ப வேண்டுமென மூன்று மணி நேரம் அவர்களை சித்திரவதை செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இளம் பெண் அன்று இரவு வீட்டுக்குச் சென்று தனது தந்தையிடம் நடந்ததை கூறியதின் பேரில் திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் மறுநாள் விடியற்காலை புகார் அளித்துள்ளனர்.
வைகாசி மாத பௌர்ணமி தினத்தில் இரண்டு வழக்குகள் அடுத்தடுத்து வந்ததால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் இரண்டு வழக்குகள் பதிவு செய்து டிஎஸ்பி ராஜன் தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கிராமிய துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் , திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பிரபாவதி, திருவண்ணாமலை மாநகர காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி, வேட்டவலம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் உள்பட அவர்களுடன் சில காவலர்களும் சேர்ந்து ஐந்து தனிப்படைகளாக தீவிர வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை இளம் பெண் விவகாரத்தில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன், பெரிய பாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் தமிழ் என்கிற தமிழரசன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, லேலே என்கிற ஹரிகரன், சர்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் திருவண்ணாமலை பாலாஜி நகரை சேர்ந்த சிவ கணேசன் என்கிற சூர்யா ஆகியோர், தர்மபுரி பெண் விவகாரத்தில் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன், அஸ்வநாதசுரனை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், தமிழ் என்கிற தமிழரசன், உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 வழக்குகளிலும் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வாசு என்கிற வாசுதேவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை சட்டம் வழிப்பறி, பாலியல் தொந்தரவு கொடுத்தது, பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் அனைவரையும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
குறிப்பாக இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளில் மூன்று பேரை காவல்துறையினர் மீண்டும் தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
வழிப்பறி மற்றும் பாலியல் சீண்டலுக்காக பயன்படுத்தப்பட்ட ஆறு செல்போன்கள் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இந்த வழக்கில் பறிமுதல் செய்த செல்போனை ஆய்வு செய்த பொழுது எந்தவித தடயங்களும் கிடைக்காமல், அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டு இருந்ததால்
செல்போன்களை தற்பொழுது ஆய்வுக்கு அனுப்பி அவற்றில் ஏதேனும் புகைப்படங்கள் உள்ளதா வேறு இளம் பெண்களை ஏமாற்றி உள்ளார்களா ? பணம் பரித்துள்ளார்களா ? என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.