விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் 7 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏமப்பேர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரின் வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலில் சீரியல் செட் அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. சீரியல் செட் முறையாக அமைக்கப்படாததால் பந்தலின் இருப்புக்கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த வினோத் என்பவரின் மகன் வர்ணீஷ்வரன், இரும்புக்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கியது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை முகலிவாக்கத்தில் சிறுவன் ஒருவன் அதிகாரிகளின் கவனக்குறைவால் மழைநீரில் இருந்த மின்சார கம்பியை மிதித்து உயிரிழந்த நிலையில், தற்போது விழுப்புரத்தில் விளக்கு அலங்காரம் செய்யும் அமைப்பின் அலட்சியத்தால் மற்றொரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.