நாட்றம்பள்ளி விபத்து
நாட்றம்பள்ளி விபத்து PT
தமிழ்நாடு

நெஞ்சை உலுக்கிய நாட்றம்பள்ளி விபத்து... வரைகலை காட்சி விளக்கம்!

webteam

வேலூர் மாவட்டம் ஓணாங்குட்டை கிராமமே துயரத்தில் தவிக்கிறது. காரணம், ஒரே நேரத்தில் 7 பெண்களை பறிகொடுத்துள்ளது இந்த ஊர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 2 வாகனங்களில் கடந்த 8ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு ஞாயிறு நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் வந்த ஒரு வேன், நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டயர் பஞ்சரானது.

நாட்றம்பள்ளி விபத்து

அப்போது வாகனத்தை இடப்புற ஓரமாக நிறுத்தாமல், நெடுஞ்சாலையின் அதிவேக பாதையிலேயே நிறுத்தப்பட்டது. அதில் இருந்த 25 பெண்களும் இறங்கி, சாலையின் சென்ட்ரல் மீடியன் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது வேகமாக வந்த ஈச்சர் லாரி, வேன் மீது பின்புறமாக பயங்கர வேகத்தில் மோதியது. இதில் வேன் தள்ளப்பட்டு, உட்கார்ந்திருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. இதில் ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாட்றம்பள்ளி விபத்து

படுகாயம் அடைந்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 அரசு அறிவித்துள்ளது. நெடுஞ்சாலையின் அதிவேக பாதையில் வாகனத்தை நிறுத்தியதாலும் பெண்கள் ஆபத்தை உணராமல் சாலையின் சென்ட்ரல் மீடியனில் அமர்ந்திருந்தாலுமே இத்தகைய பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் பழுதானால் என்ன செய்ய வேண்டும்?

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனம் விபத்தில் சிக்கினாலோ பழுது ஏற்பட்டாலோ நெடுஞ்சாலையின் மிக குறைந்த வேகப் பாதையில் நிறுத்த வேண்டும். அல்லது சற்று தள்ளி பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். உடனடியாக நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ள 1033 அல்லது 8098121212 என்ற இலவச எண்ணை அழைத்தால் நெடுஞ்சாலை ஊழியர்கள் 24 மணி நேரமும் உதவ தயாராக இருப்பதாகவும் இவர்களை அணுகும்படியும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.