திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக் கசிவால் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், மயக்கம், ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகினர். மஞ்சாங்காரணி, செங்குன்றம், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் தீவிர நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 70-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அமோனியா வாயு கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். பலரது மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டிய நிலையில், மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள 2 தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் மஞ்சாங்காரணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் 46 பேருக்கும், செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் 21 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து கேள்விபட்ட திருவள்ளூர் ஆட்சியர் கவிதா நேரில் சென்று ஆய்வு செய்தார். மருத்துவ குழுவினரும் நேரில் ஆய்வு செய்து வந்த நிலையில், செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 46 பேர் அனுமதிக்கப்பட்ட மஞ்சாங்கரணை தனியார் மருத்துவ மனையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்தது.
சம்பவம் தொடர்பாக இறால் பண்ணை உரிமையாளர்களான மோகன், ஜோசப் ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். பலபேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே அமோனியா வாயுக் கசிவால் 7 பேர் உயிரிழந்தது பற்றி விசாரிக்க குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணைபிறப்பித்துள்ளது.
மேலும் 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நேரில் சென்று ஆய்வு செய்ய அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் இருவருக்கும் முதல்வர் அறிவுறுத்திய நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகை தந்த அமைச்சர் ராஜ்மோகன் நிலை குறித்து கேட்டறிந்து அதி உயர் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.