தமிழ்நாடு

தீவிரமான ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி : பல கோடி ரூபாய்க்கு அதிகரித்த டாஸ்மாக் விற்பனை

webteam

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தீவிரமான ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட இருப்பதால் அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் விற்பனை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் சென்னையில் பாதிப்பும் உயிரிழப்பும் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் வரும் 19 ஆம் தேதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவின்போது செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் 300 கடைகள் உள்ளன. இதில் 150 கடைகள் மட்டுமே இந்த 12 நாட்களுக்கு மூடப்பட இருக்கின்றன.

இந்நிலையில், இந்த 300 டாஸ்மார்க் கடைகளில் ஒரு நாளைக்கு வழக்கமான வருமானம் 18 கோடி ரூபாயாக இருக்கும். ஆனால் தற்போது அதிலிருந்து கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது குடிப்பவர்கள் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கிக் கொள்வதால் இந்த விற்பனை உயர்வு நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.