சிறுவன் உலக சாதனை
சிறுவன் உலக சாதனை புதிய தலைமுறை
தமிழ்நாடு

2.40 நிமிடங்களில் உலக சாதனை.. 900 கிலோ எடை கொண்ட காரை இழுத்து அற்புதம் நிகழ்த்திய 7 வயது சிறுவன்!

யுவபுருஷ்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் - மாரீஸ்வரி தம்பதி. இவர்களின் மகனான தேவசுகன் நீண்ட நாட்களாகவே சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். 7 வயது மட்டுமே நிரம்பியுள்ள மகனின் ஆசையை புரிந்துகொண்ட பெற்றோர், அவனுக்கு காரை இழுக்கும் பயிற்சி கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்று மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், உலக சாதனை படைக்கும் முயற்சியில் இன்று குதித்தார். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900 கிலோ எடையுள்ள காரை இழுத்து சாதனை படைக்க ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், காரின் முன்புறம் கயிறு கட்டப்பட்டு சிறுவனுடன் இணைக்கப்பட்டது.

ஒன்றுமே தெரியாதது போன்று நின்றிருந்த சிறுவன், ரெடி ஸ்டார்ட் என்றதும் காரை இழுக்கத் தொடங்கிவிட்டார். அப்போது சிறுவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று சுற்றியிருந்த ஊர் மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்த நிலையில், கடகடவென காரை இழுச்சென்றார் சிறுவன்.

2 நிமிடம் 40 வினாடிகளில் 900 கிலோ எடை கொண்ட காரை 220 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்று தேவசுகன் சாதனை படைத்த நிலையில், அவரது சாதனையை அங்கீகரித்த சோழன் book of world records அமைப்பு சாதனைக்காக விருதை வழங்கி சிறப்பித்தது. முன்னதாக, மதுரையில் வைத்து 200 மீட்டர் தூரம் காரை இழுத்து தேவசுகன் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.