சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவரை மக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் பேரூராட்சியை சேர்ந்தவர் கணேசன். இவரது 11 வயது மகள் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி வீட்டின் அருகே உள்ள பொது சுகாதார வளாகத்திற்கு சிறுநீர் கழிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கே ஆடு மேய்த்து கொண்டிருந்த 70 வயது முதியவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளார். பெண்கள் சுகாதார கழிப்பிடத்திற்கு சென்ற முதியவர் 11 வயது சிறுமியிடம் பாலியியல் ரீதியாக வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார். அப்போது சிறுமி அலறுவதை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் ஓடிவந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து முதியவரை பிடித்து தாரமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அப்போது அங்கே போலீஸார் நடத்திய விசாரணையில் 70 வயது முதியவர் தாரமங்கலம் பேரூராட்சி புதிய நான்காவது வார்டை சேர்ந்த அப்பாதுரை என்பது தெரிய வந்தது. மேலும், அவர் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் சிறுமியிடமும், முதியவரிடமும் விசாரணை நடத்தினர். அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக முதியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.