தமிழ்நாடு

கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக கைதான 6-வது நபர்.... காவல் ஆணையர் அளித்த பேட்டி!

நிவேதா ஜெகராஜா

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை  ஒரு காரில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் வந்த கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (29) உயிரிழந்தார்.  மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோலி குண்டுகள் காணப்பட்டன. இந்த சம்பவத்தை விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீசார் தங்களது புலன் விசாரணையை முடுக்கி விட்டனர். இதையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள ஜே.எம். 5 கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கைதான 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் 6வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 6வது நபராக அஃப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கார் வெடித்தபோது உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் என கூறப்படுகிறது. இரவோடு இரவாக இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நடைபெற்று வரும் விசாரணை குறித்து காவல் ஆணையர் பேட்டியளிக்கையில், “குறைந்த வெடிக்கும் தன்மை கொண்ட வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் இருந்தது. இந்த பொருட்களை ஆய்விற்காக தடயவியல் குழுவினர் எடுத்து சென்றுள்ளனர். அதன் முடிவு வந்ததும் இவை எத்தகைய வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுகிறது என்பது தெரிய வரும்.

மேலும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகின்றது. ஒரு சில பொருட்களை அவர் ஆன்லைன் மூலம் வாங்கியிருக்கிறார். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரையும் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகின்றது” என்றார்.