தமிழ்நாடு

'ரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள்' - எடப்பாடி பழனிசாமி

'ரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள்' - எடப்பாடி பழனிசாமி

webteam

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இதன் பின் பேசிய அவர் வெள்ள நீரை சேமிக்க முதல்கட்டமாக 292 கோடி ரூபாயில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார்

பவானியில் தனது ஆய்வை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பவானி ஆற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட காளிங்கராயன் பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சென்ற அவர், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, குமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் மாவட்ட அதிகாரிகளுடன் பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வுக்குப் பின் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 499 பேர் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாவும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளோருக்கு தேவையான உணவு, குடிநீர், உடை, மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட வீடுகள், பயிர்கள் குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்ற முதல்வர், பருவமழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  வெள்ள நீரை சேமிக்க முதல்கட்டமாக 292 கோடி ரூபாயில் 62 தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒருமாத ஊதியத்தை கேரளாவுக்கு நிவாரணமாக வழங்கவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.