புதுக்கோட்டை அரசுப்பள்ளி மாணவர் தாக்குதல்
புதுக்கோட்டை அரசுப்பள்ளி மாணவர் தாக்குதல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

புதுக்கோட்டை | பள்ளி மாணவரை கடத்திச்சென்று தாக்குதல்... 6 பேர் மீது வன்கொடுமை வழக்கு; ஒருவர் கைது!

PT WEB

செய்தியாளர்: முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீர்த்தானிபட்டி கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக வெளியே வந்த மாணவன் பாலமுருகனை அதே பகுதி கிராமங்களை சேர்ந்த மாற்று சமூக இளைஞர்கள் ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த மாணவன் பாலமுருகன் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தினை அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தை சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்த்தானிப்பட்டி கிராமத்தில் மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை கறம்பக்குடி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவனை தாக்கிய ஆறு இளைஞர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தரப்பில், “மழையூர் அரசுப்பள்ளி மாணவர்களிடையே சாதிய பாகுபாடு இருக்கிறது. ஏற்கெனவே பாலமுருகனின் மீது இதே சாதிய பாகுபாடு காரணமாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.

தீண்டாமை

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அதன் விளைவாக இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது வழக்குப்பதியப்பட்ட ஆறுபேரில், சிவா என்ற 25 வயது இளைஞரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அதன்படி காவல்துறை தரப்பில், “தற்போது தாக்குதலுக்கு உள்ளான பாலமுருகன், கடந்த மாதம் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து மாணவர்களோடு ஒன்றிணைந்து மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என்ற கல்லூரி மாணவனை தாக்கியுள்ளார். பேருந்தை நிறுத்தி கண்மூடித்தனமாக அம்மாணவனை இவர்கள் தாக்கியுள்ளனர். அது குறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தின் எதிரொலியாகத்தான் தற்போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.