முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் pt
தமிழ்நாடு

’இந்துக்கள் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்..’ முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள்!

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Rishan Vengai

மதுரையில் வண்டியூர் அருகே இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது, நிகழ்வில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் மற்றும் ஆதீனங்கள், சன்னியாசிகள் பங்கேற்றனர்.

முருக பக்தர்கள் மாநாடு

தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். “குன்றம் காக்க, குமரனை காக்க..." என்ற முழக்கத்தை முன்வைத்து திருப்பரங்குன்றம் கோயில் முகப்பு தோற்றத்தில் மாநாட்டு மேடையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், சிறப்புரைகளுடன் மாநாடு நடைபெற்றது.

முருக பக்தர்கள் மாநாடு

மாநாட்டு திடலில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள், 20க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டன. 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டதோடு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்!

மாநாட்டில் பங்கேற்ற ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை மாநாட்டில் பேசி இந்துக்கள் ஒற்றுமை குறித்தும், இந்து மதத்தினரின் நம்பிக்கை குறித்தும் பேசினர். மேலும் மாநாட்டின் முக்கிய அம்சமாக 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

  • *திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்

  • *பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்

  • *குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்

  • *தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்

  • *தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்

  • *சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்

என முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி சாதனை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநாட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் முன் மஹா தீபாராதனை நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.