முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீல், வேலை வாங்கித் தருவதாக 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக அவரது உதவியாளரே டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வாணியம்பாடியைச் சேர்ந்த பிரகாசம், முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபீலிடம் உதவியாளராக இருந்துள்ளார். டிஜிபி அலுவலகத்தில் நிலோபர் கஃபீல் மீது பிரகாசம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “நிலோபர் கஃபில் அமைச்சராக இருந்தப்போது வேலை வாங்கித்தருவதாக கூறி 105 பேரிடம் 6 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளார். இந்தப்பணத்தை அவரது உறவினர்களான ஜாபர், இத்திரிஸ் கஃபில் உள்பட 4 பேரின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தி இருக்கிறார்.
மோசடி செய்த பணத்தின் மூலம் இங்கிலாந்தில் வசிக்கும் நிலோபர் கஃபிலின் மகள் பெயரில் சொத்து வாங்கியிருக்கிறார். பணம் கொடுத்தவர்கள் என்னையும் எனது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்து வருகின்றனர். ஆகையால் , மோசடி குறித்து விசாரணை நடத்தி முன்னாள் அமைச்சர் நிலோபர் கஃபில் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.