தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று

கோவையில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று

webteam

கோவை மாநகரில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை போத்தனூரை சேர்ந்த 4 காவலர்கள், குனியமுத்தூர் மற்றும் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த தலா ஒருவர் என 6 காவலர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னதாக அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்த காவலர்கள் 344 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், ஒரு பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் மீதம் உள்ள 180 காவலர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை சார்பில், சீல் வைக்கப்பட்ட பகுதியில் அவர்கள் பணியாற்றியதால் அதன்மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்ட 7 நபர்களில் 4 நபர்கள் கோவை போத்தனூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் போத்தனூர் காவல்நிலையத்தை மூடவும், தற்காலிகமாக ஒரு சில நாட்களுக்கு மண்டபத்தில் இயங்கவும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு பணியாற்றியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தவிர, சிறுமுகை பகுதியில் ஒரு பெண்ணிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 வயதுள்ள இந்தப்பெண், சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசித்தவர் என்பதால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.