தமிழ்நாடு

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவச்" ஒத்திகை! கடலோரங்களில் பரபரப்பு

Sinekadhara

"சாகர் கவச்" பாதுகாப்பு ஒத்திகை தமிழகம் முழுவதும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கடல்மார்க்கமாக நாட்டிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையிலும், நாட்டின் கடலோர பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையிலும் "சாகர் கவச்" (கடல் கவசம்) என்ற தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆண்டிற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 48 மணி நேர ஒத்திகை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது.

காவலர்களே தீவிரவாதிகளைப் போல மாறுவேடத்தில் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் ஊடுருவ முயற்சி செய்வர். அதை பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் அவர்களை தடுத்துப் பிடிப்பார்கள். இன்று காலை முதலே ஊடுருவல் மற்றும் தடுப்புப் பணிகள் ஆரம்பமானது. சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்பட 13 கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடந்து வருகிறது.

இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழக போலீஸ், தமிழக கமாண்டோ படை மற்றும் தொழிற்பாதுகாப்புப் படை வீரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒத்திகையில் முக்கியமான இடங்களாக கருதப்படும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசாரின் திடீர் சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

சென்னை மெரீனா கடற்கரையையொட்டிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டினப்பாக்கம் சீனிவாச புரம் கடற்கரையையொட்டிய பகுதிகளில் பட்டினப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சென்று பட்டினப்பாக்கம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு, கடலோர பகுதி முழுவதையும் போலீஸாா் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா். இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னையில் கடலோர பகுதிகளான காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், எண்ணூா், திருவொற்றியூா், கிழக்கு கடற்கரை சாலை, தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், அரசு பொது மருத்துவமனைகள், அரசு கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் போலீஸாா் கண்காணிப்புப் பணியை முடுக்கி விட்டுள்ளனா். மேலும் சாலைகளில் பேரிகார்டுகள் அமைத்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊடுருவ முயன்ற 6 நபர்களை காவல் குழுவினர் மடக்கி பிடித்தனர். பிடிபட்டவர்கள் போலீசாரா அல்லது உண்மையிலேயே தீவிரவாதிகளா எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.