தமிழ்நாடு

மனஅழுத்தத்தால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

webteam

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி 5-ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகள் காயத்ரி. இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு ஐந்தாம் ஆண்டு ஹவுஸ் சர்ஜன் படித்து வருகிறார். இவர் பயிற்சி மருத்துவராக அங்கு திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவக் கல்லூரியில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் தனி அறையில் தங்கி உள்ளார். இந்நிலையில் காயத்ரி நேற்று காலை முதலே அறையை விட்டு வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. கடைசியாக புதன்கிழமையன்றும் அவர் பணிக்கு செல்லவில்லை.

இதனால் வகுப்புக்கு சென்று திரும்பிய அவரது தோழிகள், காயத்ரி அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு காயத்ரி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக்கண்ட அவர்கள், உடனடியாக ஒன்றிணைந்து காயத்ரியை மீட்டு உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காயத்ரி மன அழுத்தத்தில் இருந்ததும், அதற்காக அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் நான் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக காயத்ரி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதனால் இந்த மன அழுத்தம் அவருக்கு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.