தமிழ்நாடு

`வீட்டுக்கு போக பாதை அமைத்துதரும் வரை, ஸ்கூல்லயே இருக்கேன்‘- 5-ம் வகுப்பு மாணவன் போராட்டம்

`வீட்டுக்கு போக பாதை அமைத்துதரும் வரை, ஸ்கூல்லயே இருக்கேன்‘- 5-ம் வகுப்பு மாணவன் போராட்டம்

webteam

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தில், வீட்டிற்கு செல்ல தனக்கு பாதை இல்லையென கூறி பாதை அமைத்துத் தரும் வரை 5ம் வகுப்பு மாணவன் தான் படிக்கும் அரசுப் பள்ளியின் வாயிலில் குடும்பத்தினருடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டுக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் அன்னதானக் காவேரி பிரதான வாய்க்கால் வழியாக செல்ல வேண்டியுள்ளது. தினமும் கிட்டதட்ட 10 அடி ஆழ கால்வாயில் இறங்கி செல்லும் நிலை அவர்களுக்கு உள்ளது. இதனால் தங்கள் குடும்பத்தினருக்கு வீட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரக் கோரி ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கின்றனர் அவர்கள்.

இந்நிலையில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக பொதுப்பணித்துறையின் அரசு புறம்போக்கு இடத்தில் பாதை அமைத்துத் தருமாறு ஆலங்குடி வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டும் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டுகிறார் செல்வம். இந்த நிலையில், அதிகாரிகள் பாதை அமைத்துத் தரும் வரை, மகன் படிக்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் வாயிலில் தானும் தன் மனைவியும், மற்றும் தங்கள் வீட்டுப்பெரியவர்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் செல்வம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினருடன் மாமன்னன் என்ற நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தக் கூடாது என்று போதையில் பேசியது, பிரச்னையை தீவிரமாக்கியது. ஆலங்குடி- கீரமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக காவல்துறையினர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி அனிப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சேந்தன்குடி பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் வட்டாட்சியர் அலைபேசி மூலமாக ஒரு வார கால அவகாசத்தில் பாதை அமைக்க உறுதி அளித்ததை தொடர்ந்து பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.