முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5ஆவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் குவிந்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, நினைவு நாள் உறுதிமொழியை ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க அனைவரும் உறுதியேற்றனர். கட்சியை அழிக்க பகல் கனவு காண்போரின் சதியை முறியடிக்கப் போவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர். ஜெயலலிதா நினைவிடம் செல்லும் அதிமுக நிர்வாகிகள், அருகில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த முறை எம்ஜிஆர் நினைவிடத்திற்கு செல்லாமலேயே அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.