தமிழ்நாடு

5 ரூபாய் டாக்டர்: 50 ஆண்டுக்கும் மேலான சேவை

5 ரூபாய் டாக்டர்: 50 ஆண்டுக்கும் மேலான சேவை

webteam

தரமான மருத்துவமும், சிகிச்சையும் அதிக செலவு செய்தால்தான் கிடைக்கும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால், பல ஆண்டுகளாக ஒற்றை இலக்கத்தொகைக்கு மருத்துவம் பார்த்துவரும் 5 ரூபாய் டாக்டர் மெர்சல் படத்தில் மட்டும் அல்ல, நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார். 

திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ராமமூர்த்தி, இப்போது 84 வயதாகிறது. விரட்டிய வறுமை, பசித்திருந்த பொழுதுகளை கடந்து, இவர் மருத்துவம் படித்து முடித்தார். 1958 ஆம் ஆண்டு மயிலாடுதுறை அரசு‌ மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இவர், ஓய்வு நேரங்களில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நடந்தே சென்று இலவசமாக மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பட்டமங்கல தெருவில் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வரும் டாக்டர் ராமமூர்த்தி தன்னிடம் வைத்தியம் பார்க்கவரும் நோயாளிகளிடம் மருத்துவ கட்டணம் என எதையும் கேட்பதே இல்லை. தொடக்கத்தில் ஒரு ரூபாய் கட்டணமாக அளித்து வந்த நோயாளிகள், விலைவாசி ஏற்றத்தை கணக்கில் கொண்டு அவர்களாகவே ஐந்து ரூபாயாக உயர்த்தி டேபிளில் வைத்து செல்கின்றனர்.

இப்பகுதியில் ராசியான டாக்டர் என்ற பெயரை பெற்றதால் வெளியூர்களில் இருந்து வசதியானவர்களும் கார்களில் வந்து சிகிச்சை பெற்றுசெல்கின்றனர்;. அவர்களிடமும் மருத்துவ கட்டணம் எதையும் இவர் நிர்ணயிப்பதில்லை.சென்னை தி.நகரில் கிளினிக் நடத்திவரும் சிறுநீரக மருத்துவ நிபுணரான இவரது மகன் சீனிவாசனும் தந்தை வழியை பின்பற்றி குறைந்‌த தொகைக்கு சிகிச்சை அளிக்கிறார்.இவரைப்போன்ற மருத்துவர்களால் இன்னமும் ஏழை மக்களுக்கு குறைந்தவிலையில் தரமான சிகிச்சை சாத்தியமாவதாக பெருமிதத்துடன் கூறுகிறார்கள் மயிலாடுதுறை மக்கள்.