மூணார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரைச் சேர்ந்த 22 தமிழர்களின் குடும்பங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
உலகில் அதிக மக்களை அடிமையாகக் கொண்டிருக்கும் உற்சாக பானம் தேநீர்தான். பசுந்தேயிலை சிவந்து சுவையாக பரிணமிப்பது தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்துதான். நாம் அதிகாலை தேநீரின் முகத்தில் விழிக்கிறோம். ஆனால், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி அதிகாலை மூணாரின் ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் கண்களையே மூடவைத்துவிட்டது. அந்த நிலச்சரிவின் பெருந்துயரக் காட்சிகள் இந்திய மக்களின் மனங்களை சோகத்தில் சரிய வைத்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெருமழை பெய்து இடுக்கி மாவட்டம் உருக்குலைந்து போனது. தற்போது, அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்திருந்தாலும், கொரோனாவால் மீண்டும் முடக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஜுன் 1 ஆம் தேதிமுதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. மூணாரின் ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடி பகுதியில் வசித்து வந்த தமிழகத் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் மீது நிலச்சரிவு ஏற்பட்டு 80 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து போயினர். 40 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டாலும் பலரின் உடல்கள் காணவில்லை. கொரோனா சூழலிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது தேரிய பேரிடர் மீட்புத்துறை.
இந்த, மண்சரிவில் சிக்கிக்கொண்வர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான். தென்மாவட்டங்களைச் சேர்ந்த கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி, ராஜபாளையம், சங்கரன்கோயில்,புளியங்குடி பகுதிகளைச் சேர்ந்த மக்களே வசித்து வருகிறார்கள். சிக்கிக்கொண்ட 80 பேரில் 55 தொழிலாளர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாவட்ட மக்களை இச்சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் 14 மாவட்டங்களில் இடுக்கி மாவட்டம் இரண்டாவது பெரிய மாவட்டம். இடுக்கியில் தமிழர்கள்தான் அதிகம் வசித்து வருகிறார்கள். இடுக்கி மாவட்டத்திற்கும் தமிழர்களுக்குமான பிணைப்பு என்பது தேயிலையின் வாசம் போன்றது: தேயிலைக் காடுகளில் தொழிலாளர்கள் மீது ஒட்டிக்கொள்ளும் அட்டைகள் போன்றது. ஏனென்றால், கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இடுக்கி மாவட்டத்துடன் தமிழர்கள் அதிகமாக வசித்த முல்லை பெரியாறு அமைந்திருக்கும் தேவிக்குளம், பீர்மேடு பகுதிகளை கேரளா இடுக்கியோடு இணைத்துக்கொண்டது என்பது வரலாறு. கடுங்குளிர், மழை போன்ற பல இயற்கைச் சீற்றங்களைப் பார்த்தாலும் தமிழர்கள் இடுக்கியை விட்டு இடம்பெயரவில்லை. காரணம் வறுமை மட்டுமல்ல; அம்மண்ணின் மீதான பிணைப்பும்தான்.
இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் 55 பேரில் 22 பேர் இறந்துள்ளனர். 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று, கயத்தாறுக்குச் சென்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உயிரிழந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புகைப்படங்களூக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
- வினி