சென்னையில் இருந்து அண்மை மாவட்டத்துக்கு ஒருவர் பயணிப்பதற்கே கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கோயம்பேடு டூ கோவை வரை யார் கண்ணிலும் சிக்காமல் பயணித்துள்ளார் ஒரு வியாபாரி.
கொரோனா பரவலைத் தடுக்க சாலைகளில் சோதனை, இ-பாஸ், காவல்துறை ரோந்து, இவற்றையெல்லாம் மீறி, சென்னையில் இருந்து ஒருவர் நீலகிரி பயணம் செய்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் காய்கறி கடை நடத்தி வந்த அந்த 54 வயது நபர், நடைபயணம், லாரி, பேருந்து பயணம் என சுமார் 500 கிலோ மீட்டர் எந்த சோதனையுமின்றி நீலகிரிக்குள் நுழைந்துள்ளார். கோயம்பேடு முதல் வேலூர் வரை நடைபயணம், வேலூர் முதல் சேலம் வரை லாரி பயணம், சேலம் டூ கோவைக்கு பேருந்து என அமைந்தது அவரது பயணம். மேட்டுப்பாளையம் வரை சோதனையோ, கொரோனா பரிசோதனையோ இன்றி தப்பியவர், நீலகிரிக்கு செல்லும் வழியில் பர்லியார் சோதனைச்சாவடியில் கேள்விக்கு உள்ளானார்.
கோயம்பேடு டூ கோவை என்ற பயண திட்டத்தைக் கேட்டதும், அவருக்கு கொரானா பரிசோதனை செய்தனர் அதிகாரிகள். தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி சுகாதார துறையினர் அனுப்பியதால் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள பிக்கட்டி கிராமத்திற்குச் சென்ற அவர், தனிமை அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்டு ஒரு வாரமாக ஊருக்குள் சகஜமாக நடமாடியுள்ளார். தற்போது அவருக்கு தொற்று உறுதியானதால் பிக்கட்டி கிராமத்திற்கு விரைந்த அதிகாரிகள், அந்த நபரை கோவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிக்கட்டி கிராமத்தில் வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி விட்டாலும் சென்னையில் இருந்து அவர் பயணித்து வந்த வாகனங்கள், நடைபயணத்தில் நடந்த சந்திப்புகள், எங்கு உணவு உட்கொண்டார் என கண்டறிவதில் பெரும் சிக்கலை அதிகாரிகள் சந்தித்துள்ளனர். சென்னையில் இருந்து அடுத்த மாவட்டம் செல்லவே அதிரடி கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இவரது கோயம்பேடு டூ கோவை பயணம் போன்ற அனுமதியற்ற, கண்காணிப்பில்லாத பயணம் கொரோனா பரவலில் அச்சத்தை ஏற்படுத்தவே செய்கிறது.