நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளும், 169 மதுபான பார்களும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சராக பதவியேற்ற உடன் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகளில் மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதும் ஒன்று. இதன்படி நாளை முதல் எந்தெந்த பகுதியில் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன என்பது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் சென்னை மண்டலத்தில் அடங்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 105 டாஸ்மாக் கடைகளும், 63 மதுபான பார்களும் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் அடங்கிய நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 44 டாஸ்மாக் கடைகளும், 20 மதுபான பார்களும் மூடப்படுகின்றன.
மதுரை மண்டலத்தை சேர்ந்த திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் , சிவகங்கை, திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி, தேனி ஆகிய பகுதிகளில் மொத்தம் 99 டாஸ்மாக் கடைகளும், 37 மதுபான பார்களும் மூடப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் தர்மபுரி , கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை , அரக்கோணம் ஆகிய பகுதிகளில் உள்ள 133 டாஸ்மாக் கடைகளும், 26 மதுபான பார்களும் மூடப்படுகின்றன.
திருச்சி மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை , கரூர், கடலூர் , திருவாரூர் , விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 199 டாஸ்மாக் கடைகளும், 23 மதுபான பார்களும் மூடப்படுகின்றன. மூடப்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.