சென்னை அடுத்த புழல் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த புழல், கஸ்தூரி நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான சுந்தர். இவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் கோவை சென்றுள்ளார். இதையடுத்து இன்று சுந்தர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சுந்தரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அப்போது ஊருக்குச் செல்லும் முன்பு வீட்டில் 50 சவரன் தங்க நகைகள், மற்றும் 20 ஆயிரம் பணம் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பணமும் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.