வேலூர் மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் ரமேஷ்ராஜுக்கு சொந்தமாக 50 வீடுகள் இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தெரியவந்துள்ளது.
2010-லிருந்து 2013ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் உளவுத்துறை ஆய்வாளராக ரமேஷ்ராஜ் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 28ஆம் தேதி ரமேஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்தது.
இதனையடுத்து வேலூர் மாவட்டம் இடையான்சாத்துவில் உள்ள ரமேஷ்ராஜ் வீடு மற்றும் ஊசூர்தெல்லூரில் உள்ள அவரது தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரமேஷ்ராஜ் தன் பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் 50 வீடுகள் வாங்கியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இரு இடங்களில் இருந்தும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ரமேஷ்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தேவநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.