பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான கவினின் தாயார் ராஜலெட்சுமிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அருணகிரி- தமயந்தி. இவர்களுடைய மகன் சொர்ண ராஜன், மகள் ராஜலட்சுமி மற்றும் மருமகள் ராணி. இவர்கள் 5 பேரும் அரசிடம் இருந்து எந்தவித அனுமதியும் பெறாமல், 1998-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை திருச்சி கே.கே.நகர் பகுதியில் சீட்டு கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் இதில் 34 நபர்கள் தவணை முறையில் சீட்டு பணம் கட்டி வந்துள்ளனர். ஆனால் பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு சேரவேண்டிய பணம் ரூபாய் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என, கடந்த 2007-ஆம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
குற்றம்சாட்டப்பட்ட சொர்ண ராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பணமோசடியில் ஈடுபட்ட தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு பண மோசடி வழக்கில் 5 வருடங்கள் சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும், சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதமும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என ரூ.29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் ஒருவரான கவின், இந்த மோசடியில் ஈடுபட்ட ராஜலட்சுமியின் மகன் ஆவார். சிறை செல்லும், 3 பேரும் பிக்பாஸ் கவினின் குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.