ஓமலூர் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் உள்ள அடுமனை ஒன்றிற்கு வந்த 5 பேர், தின்பண்டங்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை மறித்த அடுமனை ஊழியர் பந்தலராஜ் என்பவர், பணம் கொடுத்துவிட்டு செல்லும்படி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் கடையிலிருந்த குளிர்பான பாட்டிலை உடைத்து பந்தலராஜை தாக்கியுள்ளனர்.
இதைக்கண்ட பொதுமக்கள் 5 பேரையும் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர்கள் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீராம், வீரமணி, மணிகண்டன், சின்னதுரை மற்றும் முருகன் என்பதும் அவர்கள் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.