தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணை பலம் என்ன? ஆய்வுகள் முடிவு!

webteam

முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஐந்து பேர் கொண்ட துணைக்கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின்போது அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீரின் அளவு அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப சரியான அளவில் இருப்பதும், அணை பலமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அணையின் 13 மதகுகளின் இயக்கம்
சரிபார்த்ததில் மதகுகள் சீராக இருப்பதாக துணைக்குழு ஆய்வின் நிறைவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கை மூவர் கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  துணைக்குழுவின் தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், தமிழக அரசு பிரதிநிதிகளான தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணி, உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான கேரள நீர்பாசனத்துறை கூடுதல் உதவி பொறியாளர் ஷாஜி ஐசக், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதான அணை, பேபி அணை, அணை மதகுகள் ஆகியன ஆய்வு செய்யப்பட்டன. அணையின் 13 மதகுகளும் இயக்கிப்பார்க்கப்பட்டு, மதகுகளின் இயக்கம் சீராக இருப்பது கண்டறியப்பட்டது. அணை நீர்மட்டம், மழைப்பதிவு, நீர் வெளியேற்றம், நீர் வரத்து, அணையின் கசிவு நீர் வரத்து ஆகியன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அணையின் உறுதித்தன்மைமை உணர்த்தும் அணையின் கசிவு நீர் வெளியேறும் அளவு கணக்கிடப்பட்டது. நிமிடத்திற்கு 22.70 லிட்டர் கசிவு நீர் வெளியேறுவது அணை நீர்மட்டமான 113.50 அடிக்கு ஏற்ப இருப்பதாகவும், அணை பலமாக இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.