தமிழ்நாடு

மதுரை: பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் பெயரில் நடந்த மோசடி; போலீஸ் விசாரணை

webteam

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் காப்பீடு அட்டைக்கு எனக்கூறி தலா 100 ரூபாய் வசூல் செய்த நபர்களை கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் என்ற பெயரில், இலவச சிகிச்சை பெற காப்பீடு அட்டை வழங்குவதாகக் கூறி இரண்டு இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் கிராம மக்களை திரட்டி காப்பீடு அடையாள அட்டைக்கு எனக்கூறி ஒவ்வொருவரிடமும் தலா 100 ரூபாய் வீதம் வசூல் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கி உள்ளனர்.

இளைஞர்களின் செயலால் சந்தேகமடைந்த கிராம மக்கள், இதுகுறித்து ஊராட்சித் தலைவரிடம் கூறியுள்ளனர். ஊராட்சித் தலைவர் ஆவணங்களை சரிபார்த்தபோது போலியாக ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக பொதுமக்களிடம் தலா ரூ.100 வீதம் வசூல் செய்தது தெரியவந்தது. உடனடியாக போலி அதிகாரிகளாக நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்த இரு இளைஞர்கள் மற்றும் இரு பெண்களை நாகமலைபுதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்து உரிய விசாரணை நடத்தக் கோரினர்.

பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் கிராமங்களுக்கு சென்று 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற அணுகக்கோரி ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.