செய்தியாளர்: செ.சுபாஷ்
திருப்புவனம் அருகேவுள்ள மடப்புரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவயலில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்துவந்த அஜித்குமார் என்ற இளைஞர், பக்தர் ஒருவரிடம் நகை திருடிய வழக்கு விசாரனைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள கோசாலையில் வைத்து காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே அந்த பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு பிரிவு காவலர்களான பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், காவல் வாகன ஓட்டுநரான ராமச்சந்திரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதற்கு ஆதரவாக அதிமுக, பா.ஜ.க, தவெக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் குதித்ததுடன் கட்சிகளின் தலைவர்களும் கண்டன அறிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அந்த வழக்கானது காவல் நிலைய மரணத்தின்போது கடைபிடிக்கப்படும் 196 பிரிவு அமல்படுத்தப்பட்டு திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி வெங்கடேச பிரசாத் முன்னிலையில் இறந்த அஜித்குமாரின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி வெங்கடேச பிரசாத், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதுடன் அங்குள்ள கோயில் பணியாளர்களிடமும் விசாரனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனையின் முதல் கட்ட ஆய்வறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், இறந்த அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் தாக்குதலுக்குள்ளான காயங்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் உடனடியாக அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ஆகிய 5 பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.