தமிழ்நாடு

நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு

நிவேதா ஜெகராஜா

நேற்று முன் தினம் நெல்லை மாவட்டம் அடம்பிடிபன்குளம் கிராமத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் ஆறு பேர் சிக்கியிருந்தனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் முடிவில் நான்காவது நபரான லாரி கிளீனர் முருகன் பாறை இடுக்குகளில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினரால் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பணியிலிருந்த 6 தொழிலாளர்கள், பாறை குவியலுக்குள் சிக்கி கொண்டனர். ஞாயிறன்று காலை விபத்தில் சிக்கிய முருகன், விஜய் என 2 தொழிலாளர்கள் குவாரியில் இருந்து பத்திரமாக தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஞாயிறு அன்று மாலையில் மீட்கப்பட்ட மூன்றாம் நபர் செல்வம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் கல்குவாரியில் சிக்கியுள்ள மற்ற 3 பேர்களை மீட்பதற்காக, அரக்கோணத்தில் இருந்து நெல்லை சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர், லெப்டினன்ட் கமாண்டர் விவேக் வட்சவ் தலைமையில் 30 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து கல்குவாரியில் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மீட்புப் பணிகளைத் தொடங்கினர். 47 மணி நேரப் போராட்டத்திற்குபின் இரண்டாம் நாள் இரவு 11 மணியளவில் 4 வது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

பாறை நிலச்சரிவில் சிக்கிய ஆறு பேரில் கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் செல்வம் என 3 பேர் ஞாயிற்றுக்கிழமை வரை மீட்கப்பட்டிருந்தனர். குவாரியில் சிக்கியிருக்கும் லாரி ஓட்டுனர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் என 3 நபர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக முயன்று வந்தனர்.

இந்தநிலையில் 47 மணி நேர போராட்டத்திற்கு பின், நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன். நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். லாரி கிளீனராக உள்ளார். மீட்கப்பட்ட உடலைப் பார்த்து உறவினர்கள் முருகன் என உறுதி செய்த நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மீட்கப்பட்ட உடல் கொண்டு செல்லப்பட்டது.

முருகன் உடலை மீட்டதும், இரண்டாம் நாள் மீட்பு பணியை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிறுத்தி விட்டனர். நாளை 3ஆம் நாள் மீதமுள்ள ராஜேந்திரன் மற்றும் செல்வகுமார் என இரண்டு லாரி ஓட்டுநர்களை பத்திரமாக மீட்பதற்கான ஆய்வும் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் அதனைத் தொடர்ந்து மீட்பு பணி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.