தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 48 பேர் வேட்பு மனுத் தாக்கல்

தமிழகத்தில் இதுவரை 48 பேர் வேட்பு மனுத் தாக்கல்

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்காக இதுவரை 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு 8 பேர் வேட்புமனு செய்துள்ளனர். நேற்று மட்டும் 18 பேர் மக்களவைத் தேர்தலுக்காக வேட்புமனுக்களை அளித்துள்ளனர். இதுவரை சுயேட்சைகளே தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்காக சுயேட்சை வேட்பாளரான பாபு என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். கழுத்தில் 10க்கும் அதிகமான சங்கிலிகளை அணிந்து பத்து ரூபாய் நோட்டுகளை சட்டைப்பாக்கெட்டுகளில் வைத்துக்கொண்டு, வாக்கை விலைக்கு வாங்கியவன் பணக்காரன், வாக்கை விற்றவன் ஏழை என்ற வசனங்களை சட்டையில் எழுதியபடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் மதுபானக்கடைகளை தடைசெய்ய வலியுறுத்தியும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தடைசெய்யக்கோரியும்நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ராஜேஷ், ராஜா ஆகிய விவசாயிகள் நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் நூதன முறையில் மனு தாக்கல் செய்தனர். பதாதைகள் ஏந்தியும், கையில் மண்சட்டி ஏந்தியபடி, கழுத்தில், காலி மதுபாட்டில்களை மாலையாக அணிந்தும் ஊர்வலமாக வந்த இவர்கள், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடலூர் நாடளுமன்ற தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் நேற்று 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் பாலாஜி என்பவர், படித்து வேலை தேடி ஆண்டுகள் கடந்தும் வேலை கிடைக்காததால், நாடாளுமன்றத்தில் வேலை கேட்டு வேட்பு மனுதாக்கல் செய்தார் ‌.வேலூரில் பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி பாலாறு பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மதுரை மக்களவைத் தொகுதிக்கு பொது நல வழக்கு மைய நிர்வாக இயக்குநர் கே.கே ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே பெரியகுளம் தனி சட்ட மன்ற இடைத்தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைகள் கூட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.