தமிழ்நாடு

இன்று நிறைவடைகிறது புத்தகக் கண்காட்சி - ரூ.15 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை

ஜா. ஜாக்சன் சிங்

45-வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடையுள்ளது. இந்தக் கண்காட்சியில் இதுவரை ரூ.15 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.

ஓமைக்ரான் பரவல் காரணமாக எப்போதும் ஜனவரி மாதம் பொங்கல் சமயத்தில் நடக்கும் புத்தக கண்காட்சி, இம்முறை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, செந்னை நந்தனம் ஒய்எம்சிஏவில் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கிய புத்தகக் கண்காட்சி இன்று வரை 19 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக 14 நாட்கள் வரை மட்டுமே நடைபெறும் புத்தக கண்காட்சி, இந்த முறை 19 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதனால் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அத்துடன், புத்தகங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக இங்குள்ள பதிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கண்காட்சியில் 800 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 லட்சம் பேர் உட்பட 15 லட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் புத்தகங்களை வாங்க வருகை தந்துள்ளனர்.

இந்தக் கண்காட்சியில் எப்போதும் போலவே அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, புதினம், அரசியல், வரலாறு, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளன.கல்கி, சான்டில்யன், வைரமுத்து, ஜெயகாந்தன், ஜெயமோகன், கி.ரா. தொ.பரமசிவன், மனுஷ்யபுத்தரன் போன்றவர்களின் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.