தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- போக்குவரத்துத் துறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்- போக்குவரத்துத் துறை

Sinekadhara

தமிழகத்தில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் ஈடுபட்டார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களின் பரிசீலனைப்படி மேலும் ஒருவாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 24ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படவுள்ளதால் இன்றும், நாளையும், அனைத்துக் கடைகளும், அதேபோல் தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் இயக்கப்படலாம் என அறிவிப்பு வெளியானது.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி,
சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கிடையே 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்யவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பயணிகள் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.