கோவையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியன் எஸ்.பி. செந்தில்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை அலுவலகத்தில் பணியாற்றிய 45 வயது பெண் காவலர் அளித்த புகாரின் பேரில், செந்தில்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புகாரின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அலுவலகத்தில் பெண் காவலரை கையைப் பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியே கூறக்கூடாது என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தொடர்ந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த எஸ்.பி. செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.